கோப்புப்படம் 
அரசியல் களம்

தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியா..? - தமிழ்நாடு ஏற்காது - ஜோதிமணி

அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டு தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இதற்கிடையே, தி.மு.க. தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும், அ.தி.மு.க. தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியா..? தமிழ்நாடு ஏற்காது என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே!.. எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.