சென்னை,
நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக, மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.வும் இணைந்துள்ளன.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக, டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கிறது. இது அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை என்றாலும், ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் ஒவ்வொரு கட்சியுடனுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையின்போது, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்து வாங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த முறை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, ம.தி.மு.க.வுக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மீதமுள்ள 167 தொகுதிகளில் தி.மு.க. களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து விரைவில் தொகுதி பங்கீட்டை முடித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலையும் வெளியிட தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.