அரசியல் களம்

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

சென்னை,

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், தி.மு.க. சார்பில் மேல்சபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார்? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு இணங்க தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிக்க உள்ளார்.

இதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், ஒருவர் புதுமுகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 31 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி தந்தால் மேல்சபை பதவி வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிகிறது.

ஒரு வேளை காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை தி.மு.க. ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ள மேல்சபை பதவியிடத்துக்கும் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் அனைவரும் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டிக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.