சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23-ந்தேதி முதல் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க. மகளிர் அணியினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இந்த பரப்புரைக்கான தொகுதி வாரியான பயிற்சி கூட்டம் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சூழலில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரைக்கு தொகுதி அளவில் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு விண்ணப்பம் இன்று (20-02-2026) தொடங்குகிறது. விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை பகிர்ந்து அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
தற்போது விருப்ப மனுக்களை பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்பட உள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்கள் செலுத்திய கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விருப்ப மனு இன்று தொடங்க உள்ளதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எனவே இன்று முதல் அண்ணா அறிவாலயம் தி.மு.க. வினர் கூட்டத்தால் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிவடைந்த பின்னர், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நேர்காணலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.