அரசியல் களம்

திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள் -125 பேர், பெண்கள் - 18 பேர், முனைவர்கள் - 7 பேர், மருத்துவர்கள் - 15 பேர், பொறியியல் பட்டதாரிகள் 17 பேர், சட்டம் படித்தவர்கள் - 29 பேர். 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம்.

எல்லாரும் அதிமுக முன்னரே அறிவித்து விட்டார்களே, திமுக இன்னும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார்கள். நாங்கள் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள் பல இருக்கின்றன. எல்லாரோடும் பொறுமையாக பேசி, எல்லாரையும் திருப்தி செய்து, ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டிருக்கிறோம். காலம் தாழ்த்தப்படவில்லை. எல்லாரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக நேரமானதே தவிர வேறொன்றுமில்லை.

திமுக மகா மகா கூட்டணியை அமைத்திருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும். தேர்தல் பிரசாரத்தை 31-ந்தேதி தொடங்குகிறேன். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.