அரசியல் களம்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவா? - திருமாவளவன் முக்கிய தகவல்

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என திருமாவளவன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இதற்கிடையே, திமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும், அதிமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவுக்கு ஆதரவு அளிக்க போகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

”தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அரசியல் நெருக்கடி குறித்து இன்று மாலை இணைய வழியாக ஆலோசனை நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிய வேண்டியது எனது கடமை. ஆலோசனை முடிந்த பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.