அரசியல் களம்

சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள்: புதுவையில் விஜய் பேச்சு

மக்களோடு மக்களாக நிற்கிற தவெக வேட்பாளர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள் என்று விஜய் கூறினார்.

புதுவை தட்டாஞ்சவாடியில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள். திமுக கூட்டணி வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம்.

புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை இரு கட்சிகளுமே நிறைவேற்றவில்லை. பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூடி சேர்ந்த கூட்டணி இல்லை; சேர்ந்திருக்க முடியாமல் சேர்ந்துள்ள கூட்டணி. நாம் யாரோடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டி உறவாடவில்லை. தில்லாக, கெத்தாக தனித்து நிற்கிறோம்

பொருந்தாத கூட்டணிக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிக்கும் ஓட்டு போட்டு தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள். ஒருத்தரை ஒருத்தர் முழுங்கி ஏப்பம் விடப் பார்க்கும் இந்த இரண்டு கூட்டணியும் உங்களுக்கு ஒன்றுமே செய்யாது. உங்களுக்கு நல்லாட்சி வேண்டும், நம்பிக்கையான ஆட்சி வேண்டும். அதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்; பாஜக இருக்கும் கூட்டணியும் வேண்டாம். மக்களோடு மக்களாக நிற்கிற தவெக வேட்பாளர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள். உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள். உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த விஜய் உங்களுக்கு துணை நிற்பான். தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தவெக ஆட்சி அமைய வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து புதுவைக்கான வாக்குறுதிகளை அளித்து விஜய் கூறியதாவது:

துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழு மாநில அந்தஸ்து பெற முயற்சிப்போம்.

டிவிகே ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவி தொகையாக வழங்கப்படும்.

அரசு வேலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும்.