சென்னை,
முஸ்லிம்களுக்கு 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை மராட்டிய அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பாஜக இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். அண்மையில் மறைந்த மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் 2014-ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பாஜக. இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பாஜக அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?.
தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?. வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி. இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம். "தமிழ்நாடா தேசிய ஜனநாயக கூட்டணியா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.