அரசியல் களம்

தேர்தல் தோல்வி குறித்து பொதுக்குழு கூட்டி விவாதிக்க வேண்டும்; எஸ்.பி.வேலுமணி

அடுத்தது உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட யார் முன் வருவார்கள்? என்று எஸ்பி வேலுமணி கூறினார்.

சென்னை,

சென்னை எம்.ஆர்.சி.நகரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுக்கு அனைத்து பதவிகளையும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது கொடுத்துவிட்டார். எங்களுக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது. கடந்த 2019, 2021,2024, 2026 ஆகிய தேர்தலில் தொடர்ந்து தோல்வியைதான் சந்தித்துள்ளோம். இப்போதும் சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர். எங்களின் ஒரே எண்ணம் கட்சியில் இருந்து வெளியே சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை கட்டமைக்க வேண்டும். இனி யாரையும் வெளியே அனுப்ப கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே சூழ்நிலையை தெரிவுபடுத்தி பல முக்கியமான கூட்டணிகளை சேர்க்க வேண்டும் என கூறினோம். ஆனால் எதையும் அவர் கேட்கவில்லை. அதனால் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தோம்.

தற்போது எடப்பாடி பழனிசாமி உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். கட்சியில் இருந்து ஒவ்வொருவரையும் நீக்குவதை விட்டுவிட்டு, அனைவரையும் அழைத்து பேசி தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்தது உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட யார் முன் வருவார்கள்? எனவே, கட்சியை வேகப்படுத்தி மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது த.வெ.க.விற்கு மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் நாங்கள் இருக்கிறோம். தி.மு.க. எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.