அரசியல் களம்

துணை முதல்வராக நல்ல வாய்ப்பு: விஜய்க்கு இயக்குனர் மோகன் ஜி அட்வைஸ்

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக - அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிட ஆதரவு தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் விஜய் என்ன மாதிரியான முடிவை எடுக்க போகிறார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில், விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக மோகன் ஜி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும். வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும். இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான். இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தாவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது..

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.