அரசியல் களம்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்..?- இறுதி செய்ய நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்

தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. கொடுத்துள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தன. இந்த கூட்டணியில், பா.ம.க., த.மா.கா. மற்றும் 6 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது, அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23, பா.ஜ.க. 20, த.மா.கா. 6, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இதில் பா.ம.க. (மாம்பழம்), பா.ஜ.க. (தாமரை) தவிர த.மா.கா. உள்ளிட்ட பிற கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. அதாவது, அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டாலும், கூட்டணி கட்சிகளும் 12 தொகுதிகளில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டதால், மொத்தம் 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. புதிதாக இடம் பெற்றுள்ளது.

தற்போதைய நிலையில், இந்த கூட்டணியில் அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 30, பா.ம.க. (அன்புமணி அணி) 18, அ.ம.மு.க. 8, த.மா.கா. 5, இதர கட்சிகள் தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதை வைத்து பார்த்தால், கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அ.தி.மு.க.வுக்கு 12 தொகுதிகள் குறையும் அபாயம் இருக்கிறது.

இந்நிலையில் விரைவில் அ.தி.மு.க.- பா.ஜனதா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. விடம் கடந்த முறையைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதிகளில் கிட்டத்தட்ட 80 தொகுதிகளில் பா.ஜ.க. 2-ம் இடம் பிடித்திருந்தது.

எத்தனை தொகுதிகள்..?

இந்த 80 இடங்களில் 72 தொகுதிகளை தேர்வு செய்து பா.ஜ.க. பட்டியல் தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் தற்போது பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், பா.ஜனதா மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ்கோயல், பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந்த 35 தொகுதிகளில் அ.தி.மு.க. பலமாக இருக்கும் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. பா.ஜ.க. கேட்டுள்ள தொகுதிகளில் ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயி லாப்பூர், தியாகராயநகர், வேளச்சேரி, திருத்தணி. காஞ்சீபுரம், ஆவடி, தளி, ஆலங்குளம், தென்காசி, கோவை சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழனி, நாகர்கோவில், விளவங் கோடு, காரைக்குடி, மொடக்குறிச்சி, வேலூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்?

இதற்கிடையே, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு வேண்டிய தொகுதிகளை பா.ஜ.க.வே ஒதுக்க வேண்டியது இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், அ.ம.மு.க. கோரி வரும் 6 தொகுதிகளையும் கூடுதலாக ஒதுக்கும்படி பா.ஜ.க. கேட்டு வருகிறது. அதன்படி பா.ஜனதாவுக்கு 35, அ.ம.மு.க.வுக்கு 6 என்ற அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) தமிழகம் வர உள்ள பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஸ்கோயல் இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.