மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர் சி களமிறங்கியுள்ளார். சுந்தர் சி போட்டியிடுவதால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய சுந்தர்.சி கூறியதாவது:
"விஜய் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். என் மனைவியும் விஜய்யும் அக்கா தம்பி போன்று பழகி வருகிறார்கள். அதனால் விஜய்யை எந்த வகையிலும் விமர்சிக்கவோ அவரது கட்சி பற்றி விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை போட்டி உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும்தான். மதுரை மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல மாதம் 15 நாள்கள் இனி மதுரையில்தான் இருப்பேன் என்று உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். தேர்தல் முடிவை வைத்துதான் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பேன்” என்றார்.