அரசியல் களம்

‘கூட்டணி வைக்காமல் என்னால் வெற்றி பெற முடியும்’ – சீமான் பேச்சு

தமிழ்நாட்டில் கூட்டணி வைக்காமல் என்னால் வெற்றி பெற முடியும் என்று காட்டுகிறேன் என சீமான் பேசினார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் ‘எது அரசியல்?’ எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டம் முடிவில், சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் மற்றும் மயிலாடுதுறை, ஆலந்தூர் வேட்பாளர்களை மேடையில் நிறுத்தி சீமான் வாக்கு சேகரித்தார்.பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

“ரூ.2 ஆயிரம் கொடுப்பவர் மக்களுக்கு சேவை செய்யவா வருவார்? மக்களுக்கு சேவை செய்பவன் எதற்காக பணம் கொடுக்க வேண்டும்? ரூ.5 ஆயிரம் மக்களுக்கு கொடுத்துவிட்டு ரூ.6,800 கோடியை தமிழக அரசு இழக்கிறது. அரசு காசிலேயே ஒரு கட்சி தனக்கான வாக்கை உறுதி செய்கிறது. இது மிகப்பெரிய கொடுமை. ஒரே நேரத்தில் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் செல்கிறது. இதை மத்திய அரசும் அனுமதிக்கிறது. பா.ஜ.க. அரசு மொத்தமாக ரூ.10 ஆயிரம் போட்டது. இங்கு தி.மு.க. அரசு 3 தவணையாக ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளது. மக்களுக்கான அரசியல் இங்கு இல்லை. நாம் மக்கள் அரசியல் மட்டுமே செய்கிறோம். நான் கூட்டணிக்கு செல்லவில்லை என்று சிலருக்கு கண்ணை உறுத்துகிறது.

பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கொடியில் வண்ணம் மாறும்; ஆனால் கொள்கையில் எண்ணம் மாறாது. கூட்டணி வைக்காமல் எப்படி வெற்றி பெறுவது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது – கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள், எப்படி வெற்றி பெறுவது என்று காட்டுகிறேன். யாருக்கும் பணம் கொடுக்காமல் 36 லட்சம் வாக்குகளை வாங்கியது நாம் தமிழர் கட்சி மட்டுமே. நம்முடைய உரிமைகளை விற்கக் கூடாது. நாம் ரூ.500, 1,000க்கு ஓட்டு விற்கிறோம். அவர்கள் ஓட்டு வாங்கிக் கொண்டு நாட்டை விற்கிறார்கள். யாருக்கு ஓட்டு போட்டால் நாடும் மக்களும் நலமாக இருக்கும் என தெரிந்து ஓட்டு போடுங்கள். நல்லாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள். இந்தத் தேர்தல் களம் நம் கையில் உள்ளது,” என்றார்.