அரசியல் களம்

நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை: செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 10, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருசில சிறிய கட்சிகளுக்கும் தலா 1 தொகுதிகள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ள தி.மு.க.வில், தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகள் என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், நிவேதித் ஆல்வா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

காங்கிரஸ் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி உள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுகவும் கேட்கிறது, அவர்கள் கேட்கும் சில தொகுதிகளை நாங்களும் கேட்கிறோம். சில தினங்களில் தொகுதிகள் இறுதியாகும். திமுக குழு கொடுக்கும் தொகுதி பட்டியலை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று இறுதி செய்யப்படும். நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.