காட்டுமன்னார் கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுத லைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:- காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தேன். ஆனால் வேட்பா ளர்பட்டியலில் எனது பெயர் இல்லை. தி.மு.க. கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மாறாக அந்த கூட்டணியில் உள்ள வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீரென என்னை காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தற்போது காங்கிரஸ் கட்சியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள் என்று தெரியவில்லை.தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரசும், வி.சி.க.வும் உள்ளது.
எனக்காக விட்டுக்கொடுங்கள் என்று காங்கிரஸ் தலைமை கேட்டு இருக்கலாம், அல்லது தலைவர்கள் எடுத்த முடிவால் இது எனக்கு கிடைத்திருக்கலாம். நான் எதில் போட்டியிடுகிறேன், எப்படி போட்டியிடுகிறேன் என்று எனக்கு இதுவரை தகவல் வரவில்லை. இந்த தொகுதியை திருமாவளவன் கொடுத்து அவர்கள் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா?. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட சொல்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் தலைவரும், வி.சி.க. தலைவரும் ஒன்று சேர்ந்து என்ன முடிவை சொல்கிறார்களோ? அதன்படி செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.