சென்னை,
சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பிரசாரத்தின்போது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில் அடங்காத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வடசென்னை வாடாத சென்னையாக மாறி வருகிறது. இந்த பெருமை முதல்-அமைச்சரையே சாரும்.
திமுக அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை நகல் எடுத்து தேர்தல் அறிக்கை என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் வட சென்னையில் மட்டும் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன; வட சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மழை வெள்ள பாதிப்பில் கூட மக்களை சந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல், தாமரை சின்னத்தில் போட்டியிட இருக்கின்றனர். உண்மையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?.
பாஜக பிரித்துக் கொடுத்த தொகுதிப் பங்கீட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வாசித்தார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு கூடுதல் தொகுதி எனக் கூறும் பழனிசாமி வரலாற்றை மறந்துவிட்டார். முடிந்தால் எடப்பாடி பழனிசாமி டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளட்டும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.