சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் அதற்கு தயாராகி வரும் நிலையில், இடையே மார்ச் மாதம் 16-ந் தேதி, தமிழகத்தில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆளுங்கட்சியாக தி.மு.க. கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியிலும் சட்டசபை தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேல்சபை எம்.பி. பதவிகளுக்கும் மல்லுகட்டு நடக்கிறது.
தமிழகத்தில் இருந்து மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அ.தி.மு.க.ஆதரவு தமாகா எம்.பி. ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகின்றன.
தமிழக சட்டசபையில் கட்சிகளுக்கு இருக்கும் உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையிலேயே மேல்சபை எம்.பி. பதவி இடங்கள் கிடைக்கும். அந்த வகையில், தற்போது காலியாகும் 6 இடங்களில், 4 தி.மு.க.வுக்கு, 2 அ.தி.மு.க.வுக்கு கிடைக்க உள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க.வில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மீதமுள்ள 3 இடங்களில் ஒரு இடம் தே.மு.தி.க.வுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதால், எல்.கே.சுதீஷ் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
மீதமுள்ள 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க. மற்றும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் சீட் கேட்டு வருகின்றனவாம்.
ஆனால், தி.மு.க. தலைமையோ, 3 கட்சிகளிடமும் இல்லை என்று கூறிவிட்டதாம். ஜோயல், கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது தி.மு.க.வின் நிலை என்றால், அ.தி.மு.க.வின் நிலையோ இதைவிட சிக்கலாக இருக்கிறது. கையில் இருக்கும் 2 சீட்டுக்கு பா.ம.க. தரப்பில் அன்புமணி ராமதாஸ், தற்போதைய எம்.பி. ஜி.கே.வாசன் ஆகியோர் கேட்டு வருகின்றனராம்.
மற்றொரு பக்கம், டி.டி.வி.தினகரன், அமித்ஷா மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறாராம். தம்பிதுரையும் மீண்டும் வாய்ப்பு கேட்டு வருவதால், அவருக்கு வழங்கப்பட்டால் ஒரு இடம் மட்டுமே மிஞ்சும். அதைப்பெறவே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி யாருக்கு கொடுப்பார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.