அரசியல் களம்

சென்னையில் 3 பெண் வேட்பாளர்களை களமிறக்கும் அதிமுக...?

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலமிக்கதாகவே உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலில் 'மெகா' கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பலமிக்கதாகவே உள்ளது.

இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. அதாவது பா.ஜனதா 27, பா.ம.க. 18. அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.

இந்த 169 தொகுதிகளின் பெயரையும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. களம் காண்கிறது. சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், சென்னையில் திருவிக நகர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய 3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திரா போட்டியிட உள்ளதாகவும், திருவிக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உத்தேச வேட்பாளர்கள்:-

கார்த்திக் குப்பன் - திருவெற்றியூர்

ராஜேஷ் - ஆர்.கே.நகர்

கிருஷ்ணமூர்த்தி - கொளத்தூர்

திருமங்கலம் மோகன் - வில்லிவாக்கம்

அபிஷேக் ரங்கசாமி - எழும்பூர்

பாலகங்கா - துறைமுகம்

ஆதி ராஜாராம் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி

அசோக் - வேளச்சேரி

ரவி - விருகம்பாக்கம்

சத்தியா - தியாகராய நகர்