அரசியல் களம்

'ஜனநாயகன்' பட பிரச்சினை; தேர்தல் பிரசாரத்தில் முதல்முறையாக பேசிய விஜய்

இன்று திருச்சி பிரசாரத்தில் விஜய் முதல் முறையாக 'ஜனநாயகன்' பட விவகாரம் குறித்து பேசினார்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்ட நிலையில், இந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தின் கதவுகளை படக்குழு தட்டியது. நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், மீண்டும் தணிக்கை வாரியத்திடமே 'ஜனநாயகன்' படக்குழு முறையிட்டது. தற்போது சென்சார் பிரச்சினை முடிந்து, ஏப்ரல் கடைசி வாரத்தில் படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

'ஜனநாயகன்' பட பிரச்சினை பற்றி விஜய் இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். தனது சொந்த பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், மக்கள் பிரச்சினைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார் என்று விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று திருச்சி பிரசாரத்தில் விஜய் முதல் முறையாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசினார். விஜய் பேசியதாவது:

“கரூர் சம்பவம் சூழ்ச்சி என்று பலர் சொல்வது மாதிரி, கடைசி படமான 'ஜனநாயகன்', நம்ம மனசுக்கு நெருக்கமான நமக்கு இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னும் எங்கே இறுக்கமாக மாற்றிடுமோன்னு… எங்கே இந்த தேர்தலில் நமக்கு இது பெரிய ஆயுதமாக மாறிடுமோன்னு ஒரு கூட்டு சூழ்ச்சி… அதோட இன்னும் பல பல சூழ்ச்சிகள்… அதனால், உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துதான் நீதி வேண்டும்” என்றார்.