ஈரோடு,
ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரசுக்கு பயன் கிடைத்து இருக்கிறது. எங்களிடம் வந்துவிடுவோம் என கூறி காங்கிரஸ் கூடுதல் சீட்டுகளை பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை பெறக்கூடிய நிலை தற்போது உள்ளது. ஆட்சியில் பங்கு என்று நாங்கள் அறிவித்ததால் தான் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள்.
தவெக வலிமையான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். எனென்றால் அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவரது மகனுக்கு தான் கிடைக்கப்போகிறது.
அதனால்தான் ஆதங்கத்தில் ஜெயக்குமார் பேசுகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்; அவரது கருத்துக்கு பதில் சொல்வது நன்றாக இருக்காது. ஆட்சியில் பங்கு என்பது எங்கள் கட்சியின் கொள்கை. கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.