அரசியல் களம்

சமூக வலைதளங்களில் வைரலாகும் கருணாநிதியின் பொன்மொழி

கலைஞரின் இந்த பொன்மொழி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜயின் தவெக 111 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 63 இடங்களிலும் முன்னிலையிலும், திமுக கூட்டணி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நடிகர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கியது. இதேபோன்று மகளிருக்கு விடியல் பயணம் என்று நகரப் பேருந்துகளில் இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டனர்.

இதே போன்று தமிழ் புதல்வன், தாயுமானவன் திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்டது. இதன் காரணமாக திமுக இந்தமுறை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக மக்கள் விஜய் கட்சிக்கு வாக்களித்து இருப்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

இந்த சூழலில் தான் கலைஞர் கருணாநிதி சொன்ன வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அதில் செய்தியாளர்கள் கலைஞரிடம் இத்தனை வருட தேர்தல் வாழ்க்கையில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, நம்மால் பயனடைந்தவர்கள் நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

மக்களுக்கு நல்லது செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக மட்டும் தான் என் அரசியல் வாழ்வை பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது கலைஞரின் இந்த பொன்மொழி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திமுக ஆட்சியில் பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் நடிகர் விஜய்க்கு வாக்களித்து ஒரு மாற்று அரசியல் தமிழகத்தில் வேண்டும் என்று நினைத்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.