சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக் கொருவர் முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டு சூசகமாக தெரிவித்துள்ளார்.
அந்த படத்தில், ஒரு பீட்சாவுக்கு பலர் தலைமுடியை பிடித்து அடித்துக் கொள்வது போன்ற படத்தை ஒருபக்கம் வெளியிட்டு அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் தற்போதைய நிலை என்றும், அது முட்டாள் தனம் என்றும் தெரிவித்து உள்ளார்.
அதன் அருகில் மற்றொரு படத்தில் அதே பீட்சாவை அனைவரும் பொறுமையாக இருந்து ஆளுக்கொரு துண்டை அமைதியாக உண்பது போன்ற படத்தை வைத்து அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை இதுபோன்று மாற்ற முயற்சி என்ற கருத்தை தெரிவித்து உள்ளார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போன்று, கரூர் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைத்தள பதிவில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சந்திரசேகரன் தனது சமூக வலைத்தள பதிவில், "தாங்கள் (ஜோதிமணி) ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட அனைத்து மேலிட தலைவர்களுடனும் நேரடியாக பேசிட, தகவல்களை தெரிவித்திட வாய்ப்பு உள்ளவர்.
ஆனால் உட்கட்சிப் பிரச்சினைகளை பொதுவெளியில் பதிவிடுவது ஏன்?. இதனால் நமது கட்சிக்குத் தான் பல வீனம் என்பதை உணராதது ஏன்?. இந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பா ளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறும் நீங்கள், நாடாளுமன்ற வேட்பாளராக உங்களை அறிவித்தபோது என்ன வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்கத் தயாரா?.
2-வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாங்கள். அடுத்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள் என்று இப்போதே அறிவிக்கத் தயாரா?" என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.