நாமக்கல்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று குமாரபாளையம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோழமைக் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தங்கமணிக்கு ஆதரவாக பொதுமக்களை நேரில் சந்தித்து உற்சாகமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டோம்.
இன்று குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் இந்த விடியா திமுக ஆட்சியை எப்போது விரட்டி அடிப்போம் என்ற முடிவு தெளிவாகத் தெரிந்தது, மேலும் அவர்கள் அனைவரின் ஆதரவும் நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கும் என்பது இன்றே முடிவு செய்யப்பட்டு விட்டது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, மக்கள் குடுத்த உற்சாக வரவேற்பும் அவர்களின் பங்களிப்பும் நம் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக உள்ளது. வளர்ச்சியும் மக்கள் நலனும் நோக்கமாகக் கொண்ட நம் அணிக்கு, குமாரபாளையம் மக்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மக்கள் சக்தியுடன், நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.