சென்னை,
சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10. விடு தலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.- 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த 3 கட்சிகளுக்கும் நேற்று முறைப்படி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.
கூட்டணிக்கு ஏற்கனவே ஆதரவை தெரிவித்திருந்த முத்தரையர் சமூகத்தை சேர்ந்த கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது. இந்த 4 கட்சிகளும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டி என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டி யிடும் தொகுதிகள் விவரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.