அரசியல் களம்

ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது- சசிகலா

தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் தோல்வி அடைந்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷடவசமானது.

தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.