அரசியல் களம்

தேர்தலுக்கு ஒரு மாதம்.. வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வாரம்: திமுக, அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி

அதிமுக கூட்டணியில் அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியிலும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடியவில்லை. தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு

26 கட்சிகள் இடம்பெற்றுள்ள தி.மு.க. கூட்டணியில், இதுவரை காங்கிரஸ் 28, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகள் என 6 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டுவரும் நிலையில், கடந்த முறை வழங்கிய 6 தொகுதிகளையும்விட ஒன்று குறைவாக வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறியதால் இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன. இதனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறவே இல்லை.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தாலும், இன்னும் ஒரு கட்சிக்கு கூட தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 162, பா.ஜ.க. 31, பா.ம.க. 17, அ.ம.மு.க. 9, த.மா.கா. 4, இந்திய ஜனநாயக கட்சி 2, புதிய நீதிக்கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2, பார்வர்டு பிளாக் 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1, புரட்சி பாரதம் 1 என தொகுதிகளை பிரித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் என தெரிகிறது.

கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்கும் அன்புமணி, டி.டி.வி.தினகரன்

அதேபோல், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அந்தக் கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் 2 தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

ஆனால், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர், தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள்.

பியூஸ் கோயல் இன்று சென்னை வருகை

அதாவது, பா.ம.க. 23 தொகுதிகளையும், அ.ம.மு.க. 12 தொகுதிகளையும் கேட்கிறது. இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் இன்றைக்கு தொகுதி பங்கீடு ஓரளவுக்கு இறுதியாகும் என்று நம்பப்படுகிறது.

இதேபோல், பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ் அணியும், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், வடமாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் அணி 30 தொகுதிகளிலும், தென்மாவட்டங்களில் சசிகலா கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிகிறது. ஆனால், அவர்கள் இருவரும் இன்னும் தொகுதி பங்கீட்டை அறிவிக்கவில்லை.

வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வாரம்..

அதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

எது எப்படியோ, தமிழகத்தில் வேட்புமனுதாக்கல் அடுத்த வாரம் திங்கட்கிழமை (30-ந் தேதி) தொடங்க இருக்கிறது. எனவே, ஒருவார காலத்துக்குள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தொகுதி பங்கீட்டையும், என்னென்ன தொகுதிகள் என்பதையும் அடையாளம் கண்டு முடிக்கவேண்டும். அடுத்து, அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட வேண்டும்.