அரசியல் களம்

புதுச்சேரியை 2 முறை ஆண்ட இரட்டை இலைக்கு இரண்டு தொகுதி தானா? - தொண்டர்கள் கடும் அதிருப்தி

பா.ஜனதா கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

1964, 1969, 1974, 1977, 1980, 1985, 1990, 1991, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது 15-வது சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்கிறது. 1974-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி 21 நாட்களில் கவிழ்ந்தது.

பின்னர் ஜனாதிபதி ஆட்சி நடந்தது. அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். அவரது ஆட்சி 1 ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது. அதன்பின் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி நடந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தோடு இணைந்து புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்கள் தேவை இருந்தபோது சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சி அமைத்தார்.

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்தும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. தனித்தும் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களும், அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா, அ.தி.மு.க. (தேசிய ஜனநாயக கூட்டணி) அமைத்து போட்டியிட்டு 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 5 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடங்களை கூட பிடிக்கவில்லை.

இந்த நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்-16, பா.ஜனதா-14 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய கட்சிக்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 2 முறை ஆளும் கட்சியாகவும், இதர கட்சியுடன் கூட்டணியாகவும் வென்ற அ.தி.மு.க.வுக்கு தற்போது வெறும் 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.