சென்னை,
சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்காளர்களின் வசதிக்காகவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்திடும் வகையிலும் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு இன்று மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சென்னை மாவட்டத்தின் சார்பில் வாக்காளர்களுக்கு பல்வகை தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே இடத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி வாக்காளர்களின் வசதிக்காகவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்திடும் வகையிலும் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.
அவ்வாறாக, ஒரே இடத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளான ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை, இளையா தெருவில் உள்ள பிரின்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பு-1 (Prince Apartment) மற்றும் குடியிருப்பு-2ல் 2 வாக்குச்சாவடி மையங்கள், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம், கோயம்பேடு சவுத் ஏசியன் கேம்ஸ் கோஆர்டினேட் அடுக்குமாடி (South Asian Games Co-ordinate Quarters) குடியிருப்புப் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்கள், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சிடிஎஸ் ரீகல் பாம் கார்டன் அடுக்குமாடி (CDS Regal Palm Garden Apartment) குடியிருப்பு என மொத்தம் 5 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளின் உள்ளேயே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த 5 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இக்குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டு, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வுகளில், மண்டல அலுவலர்கள் ராஜ்குமார் (தண்டையார்பேட்டை), வரதராஜன் (கோடம்பாக்கம்), தேர்தல் அலுவலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.