அரசியல் களம்

மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.

சென்னை,

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரல் 2-ந்தேதி காலியாகின்றன. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ந்தேதி தொடங்கியது. நேற்று நிறைவடைந்தது.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை எம்.பி., மற்றொரு இடத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிவு இல்லாததால் சுவாமிநாதனின் மனு இன்று தள்ளுபடி செய்யப்படும். இதற்கிடையே அன்புமணி வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள கூடாது என ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் அன்புமணியின் வேட்புமனு ஏற்கப்படுவதாக அறிவித்தனர். மேலும் தம்பிதுரையின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.