விழுப்புரம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயலாளர் என்று கூறி வந்த சசிகலா, இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக புதிய கட்சி தொடங்குவதாக சசிகலா அறிவித்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். தனது கட்சியின் பெயர் ‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று சசிகலா அறிவித்தார்.
இதற்கிடையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 2026 தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? தனித்துப் போட்டியா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததையடுத்து, ராமதாஸ் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து சசிகலா ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஏற்கனவே கடந்த 11-ந்தேதி ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசியிருந்தார். அப்போது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட ராமதாசுக்கு சசிகலா அழைப்பு விடுத்தார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.