மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயலாளர் என்று கூறி வந்த சசிகலா, இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார்.இந்த நிலையில், திடீர் திருப்பமாக புதிய கட்சியை அறிவித்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், கட்சியின் பெயரை இன்று சசிகலா அறிவித்துள்ளார். “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா, கட்சியின் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். தனது கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
வரும் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் சசிகலா கூறினார். மேலும், ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் சசிகலா தெரிவித்தார்.