சென்னை,
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த பியூஸ் கோயலை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ.) கட்சிகளின் தலைவர்கள் இன்று வருகை தந்தனர்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பா.ஜ.க. 27 தொகுதிகளிலும், பா.ம.க. 18 தொகுதிகளிலும், அ.ம.மு.க. 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.