சென்னை,
சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்க உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜனதா, பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க.விடம் இருந்து குறைந்தபட்சம் 30 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. தரப்பில் 27 இடங்கள் வரை ஒதுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான பா.ம.க.வுக்கு 17 இடங்களும், அ.ம.மு.க.வுக்கு 9 இடங்களும், த.மா.கா.வுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கூட்டணியில் சேர்ப்பதற்காக டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், கடந்த 19-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிக ளுடனான தொகுதி பங்கீடு 4 நாட்களில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் நாளை காலை 10 மணிக்கு சென்னை வருகிறார். இங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்த நடத்த உள்ளார். எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், நாளை தொகுதி பங்கீடு இறுதி அடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.