அரசியல் களம்

அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை: விஜய் மீது பிரேமலதா கடும் தாக்கு

தேர்தலில் அனுபவம் இல்லாத லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய் விஜய் என்று பிரேமலதா கடுமையாக தாக்கி பேசினார்.

சேலம்,

சேலம் கோட்டை பகுதியில் நேற்று இரவு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் முன்னேறத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் பெண் இனத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்கள். நான் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி. முதல்-அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தை வஞ்சிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் போராடி வருகிறார். இதற்காக நாளை (அதாவது இன்று) அறிவித்துள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நடிகர் விஜய் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க போகிறேன் என்று கூறுகிறார். பெரிய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன ஆனார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். விஜய் இரண்டு பேருக்கு தான் போட்டி என்று கூறுகிறார். முதலில் உங்கள் வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டு பேசுங்கள். 75 ஆண்டுகால பாரம்பரிய கட்சி இருக்கும்போது, தேர்தலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய். இவ்வாறு அவர் பேசினார்.