அரசியல் களம்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், தி.மு.க. 173, காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக இணைந்துள்ளது. எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் தி.மு.க .கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தி.மு.க.வில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. ஒரு சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத பாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, கல்வியிலும் தொழில்துறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, மத்திய பா.ஜ.க. அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் தி.மு.க. அரசையும் அதை கலைஞரின் முத்திரையோடு இயக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் இப்பொதுக்குழு மனமார பாராட்டுகிறது.

இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட்பாடுகள் ஒங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட தி.மு.க. கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து, 2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுப்பெற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.