அரசியல் களம்

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைகிறார்

திமுகவின் கைப்பாவையாக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் என டி.செல்வம் குற்றம் சாட்டினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் மீது கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால், உடனடியாக அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்தார்.

இதனையடுத்து இதுகுறித்து காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் கூறியதாவது:-

என்னை நீக்குகின்ற அதிகாரம் செல்வப்பெருந்தகைக்கு இல்லை. தி.மு.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு கிடையாது. காங்கிரஸ் கட்சியை தி.மு.க. காலடியில் அடகு வைத்துவிட்டார். ராஜீவ்காந்தியின் ஆன்மா இவரை ஒருபோதும் மன்னிக்காது.

காங்கிரஸ் கட்சியின் 80 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து எதிர்த்து வந்ததால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கை யாக இதை செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் மீது இவர் (செல்வப்பெருந்தகை) நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார். பிற்பகல் 3 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் டி.செல்வம் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்கிறார்.