அரசியல் களம்

அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..?

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது. ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்து மாநிலத்தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் காவல்துறையுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் சென்னையில் இந்திய தேர்தல் கமிஷன் தலைவர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் வரும் 5ம் தேதி கேரளா சென்று 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்கு வங்காளம் சென்று சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். பத்தாம் தேதிக்கு பின்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.