அரசியல் களம்

தமிழக சட்டசபை தேர்தல்: வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நிறைவு

இறுதி வேட்பளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.

சென்னை,

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது.

முதல்நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேபோல் தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.நேற்று முன் தினம் மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த வகையில், இந்த கால அவகாசம், இன்று பிற்பகலுடன் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 599 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 5 ஆயிரத்து 132 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 139 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.