அரசியல் களம்

விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

விஜய் பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம் என்று கொடுப்பார்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்.” என்று பேசியுள்ளார். இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளது.

விஜய், பேச்சு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் முறைகளை தகர்க்கும் செயலாகும். இந்த விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மாதிரி விதிமுறைகளை மீறியுள்ள விஜய் மீது, தேர்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தலைமைத் தேர்தல் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.