அரசியல் களம்

தை மாதமும் முடிந்து போனது.. ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவுதான் என்ன...?

ஓ.பன்னீர்செல்வம், தற்போது வரை ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

சென்னை,

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது நிலைமை படுமோசமானது. அ.தி.மு.க.வை விட்டே வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போது வரை ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

அதிரடி காட்டிய ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பும் போதெல்லாம், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறிவந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய நான் ரெடி, இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று அதிரடி காட்டினார்.

சற்று நேரத்திலேயே அதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, "ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை" என்று கையை விரித்துவிட்டார்.

தை மாதமும் முடிந்துவிட்டது

இதனால், அடுத்தக் கட்ட முடிவு என்ன? என்பதை அறிவிக்காமலேயே ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்து வருகிறார். தை மாதமும் இன்றோடு முடிவடையும் நிலையில், தை மாதத்தில் அவருக்கு வழி பிறக்காமலேயே போய்விட்டது.

இனி அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. நடிகர் விஜய்யின் த.வெ.க. தான். ஏற்கனவே, சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, த.வெ.க.வில் இணைய முடிவு செய்துவிட்டார். வரும் தேர்தலில் தென்மாவட்டங்களில் உள்ள 25 தொகுதிகளில் ஆதரவாளர்களை களம் இறக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆதரவாளர்கள் சொல்வது என்ன?

இதுபோன்ற முடிவைத்தான் இனி ஓ.பன்னீர்செல்வமும் எடுக்க வேண்டியது வரும் என்று அவரது ஆதரவாளர்களே கூறுகிறார்கள். த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி, தான் போட்டியிடுவதுடன், தனது ஆதரவாளர்களையும் களம் இறக்குவது தான் சரியான முடியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.