அரசியல் களம்

ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள் பதவி பேராசைக்காக அ.தி.மு.க.வுக்கு மாபெரும் துரோகத்தை எம்.எல்.ஏ.க்கள் செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு பிரிவுகளாக செயல்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2026, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். அ.தி.மு.க. 47 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் என்று மொத்தம் 53 இடங்களில் வெற்றிபெற்றோம். அ.தி.மு.க.வின் ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களித்தனர். ஆனால், வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும் கட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டு அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பெற வேண்டும் என்ற பேராசையுடன் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொறாடாவின் உத்தரவிற்கு மாறாக, ஆளும் அரசின் ‘நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு’ ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களது இந்தச் செயல் அ.தி.மு.க.வுக்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

வெற்றியும், தோல்வியும் அரசியலில் மாறி மாறி வருவது இயல்பு. தற்போது அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், வெற்றி பெற்ற கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஆளும் கட்சியுடன் இணைந்தால் 6 அமைச்சர்களும், 10 வாரியத் தலைவர் பதவிகளும் கொடுக்கப்படும் என்ற ஆசைவார்த்தைக்கு மயங்கி, தங்கள் சுயநலத்திற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவர்களின் செயல்களை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்து கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

நான் ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு அரசியல் செய்வதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி பரப்பி வருகின்றனர். தொண்டர்களை நான் நேரில் பார்ப்பதில்லை என்று உண்மைக்கு மாறாக சொல்கின்றனர். 2021-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள்.அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். பதவி ஆசைக்காக அ.தி.மு.க.வுக்கு துரோகம் இழைத்துள்ளவர்கள், என்னைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

அமைச்சர் மற்றும் வாரிய பதவிகளுக்காக சுயநலத்துடன் செயல்படும் ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் என்ற உணர்வோடுதான் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து வருகிறேன்.'எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கட்சி தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கட்சியின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அ.தி.மு.க. மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.