அரசியல் களம்

விஜய் கட்சிக்கு சென்றவர்கள் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர் - எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேச்சு

கரூரில் 41 பேர் இறந்தபோது, அங்கே செல்லாமல் சென்னை போன விஜய் திரும்பி வரவே இல்லை என எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவையில் அதிமுக உறுப்பினர்களிடையே நடந்த கூட்டம் ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது விஜய்யின் திரைப்படம் ஒன்று வெளியாவதில் சிக்கல் நிலவியது. அப்போது விஜய் அவர்கள் என் வீட்டில் வந்து என்னை சந்தித்தார். நான் விஜயை என்னுடைய காரில் அழைத்துக்கொண்டு அண்ணன் எடப்பாடியாரை சந்தித்து அந்த திரைப்படம் வெளியாக உதவி செய்தேன்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம், ஆட்சிக்கு வர ஆசைப்படலாம் ஆனால் ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.தான் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். அவர்களிடம் நிறைய பேர் நீங்கள் நடிகராக இருந்ததால் தான் முதலமைச்சர் ஆக வந்தீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு எம்ஜிஆர் நான் நல்லவனாக பாமர மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ததால் முதலமைச்சர் ஆனேன் என்றார்.

விஜய் அவர்கள் என்னுடைய நண்பர்தான் ஆனால் அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க மாட்டேன். அப்போஅப்போ பொது வெளியில் பேசிவிட்டு அப்புறம் வீட்டிற்குள் சென்று விடுகிறார். அவர் கரூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களை நேரில் கூட சென்று சந்திக்காமல் இருந்தவர் தான் நடிகர் விஜய்.

அதிமுகவில் இருந்து விஜய் கட்சிக்கு சென்றவர்கள் சென்ற வேகத்தில் அதிமுகவிற்கு திரும்ப வர தயாராக உள்ளனர். விஜய் கட்சியில் இங்கிருந்து சென்றவர்களுக்கு மரியாதை இல்லை. ஏற்கனவே இருந்த பதவியை அதிமுகவில் கொடுத்தால் வர தயாராக இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்கள் தொழில் முதலீட்டாளர்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டு போடப்போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.