சென்னை,
சென்னையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பற்றிய பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம். தமிழ்நாட்டில் 12.50 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 75,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் படங்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இது மிகப்பெரிய வெற்றி, இது நாட்டுக்கே முன்னுதாரணம்.
கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கே முன்னுதாரணமான தேர்தலாக இந்த தேர்தல் நடத்தப்படும். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் கண்காணிக்கப்படுவர்; தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.