அரசியல் களம்

வாக்காளர் பட்டியலில் எதுவரை பெயர் சேர்க்கலாம்? - தேர்தல் கமிஷன் தகவல்

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6-ந் தேதியாகும்.

புதுடெல்லி,

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அதில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது என்றாலும், இந்த தேர்தலில் வாக்களிக்க கூடுதல் வாய்ப்பை பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்புவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6-ந் தேதியாகும். எனவே அதற்கு முன்பு 10 நாட்கள் என்றால், மார்ச் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர்க்கப்படும் வாக்காளர்களுக்காக துணைப் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். அதில் இடம் பெற்றவர்களும் வாக்களிக்க முடியும். மார்ச் 27-ந்தேதிக்கு பிறகு என்றாலும் கூட பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஏனென்றால், தேர்தல் முடிந்த பிறகுதான் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.