அரசியல் களம்

த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு?

பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க. சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், த.வெ.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை...