அரசியல் களம்

மக்களின் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காதவர் விஜய்: நடிகை கஸ்தூரி தாக்கு

சினிமாவை வைத்துதான் ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என்பது இல்லை என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி தொடங்கி 5 ஆண்டுகள் முடியும் நிலையில் போதைப் பொருள் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி போன்றவை இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை இரவு 9 மணிக்கு மேல் எங்கேயாவது நடைபயிற்சி போக சொல்லுங்கள் பார்க்கலாம்.

சினிமாவை வைத்துதான் இந்த ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என்பது இல்லை. நாஞ்சில் சம்பத் விமர்சனம் ரசிக்க தக்கதாக இல்லை. தமிழகத்தில் நடக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் என மக்களின் எந்த பிரச்சினைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக் கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். ஆதவ் அர்ஜுனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை.

அமைதியாக இருந்து வெற்றி பெறுவதெல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்து விட்டது. நடிகை கங்கனா ரனாவத் படத்திற்கு வந்தது போலவே ஜனநாயகன் படத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றதற்கு மத்திய அரசு கையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.