அரசியல் களம்

விஜய்யின் த.வெ.க. சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கணிப்பு

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கப்போகிறது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர்,

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, கரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“எனக்கு தெரிந்தவரை த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு மிக அதிகமாக உள்ளது. எனவே, விஜய்யின் த.வெ.க. சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், அ.தி.மு.க. இந்த தேர்தலில் 3-வது இடத்திற்கு செல்வது மட்டுமில்லை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கப்போகிறது. தமிழக மக்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் எந்த கட்சிக்கும் வாக்கு செலுத்தமாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணிக்குள் இருக்கும் பல கட்சிகள் அதிகாரப் பகிர்வு குறித்து வலியுறுத்தி வந்தாலும், பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பதே எங்கள் பிரதான இலக்காகும். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எதிர்காலத்திற்காகவும், பா.ஜ.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காப்பதற்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி.

கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சியும் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் அதைத்தான் செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஒரு பொறுப்பான கட்சியாக, சில சமயங்களில் இதுபோன்ற சமரசங்களை நாம் செய்ய வேண்டியிருக்கும்.

கூட்டணி இப்போது உறுதி செய்யப்பட்டுவிட்டதால், இனி தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழகமும், இந்தியாவும் தற்போது ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.