அரசியல் களம்

தண்ணீர் திவால்: தினத்தந்தி செய்தியை சுட்டிக்காட்டி த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

தண்ணீரில் திவாலாக போகுது, கனிம வளத்தில் திவாலாக போகுது, மொத்தத்தில் தமிழ்நாடே திவாலாக போகுது என்று விஜய் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் 4,900 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். விஜய் வருகையையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சி வந்து குவிந்தனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். பச்சை துண்டு அணிந்து நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பங்கேற்றார்.

இதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெறும் பகுதியில் பிரசார பேருந்தின் மேல் நின்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மதிப்பிற்குரிய மனிதர்கள் விவசாயிகள். விவசாயிகள் பார்க்க சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக தெரியாதுதான். அதை நான் ஒத்துக்குவேன். மத்தவங்களை போல நானும் டெல்டா காரன்தான் என உங்க காதில் டால்டா ஊற்ற மாட்டேன்.

காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை பற்றியெல்லாம் உனக்கு தெரியுமா எனக் கேட்கிறார்கள். ரிமோட்லி ஆபரேட்டட் வெஹிக்கிள் (ROV) மூலம் தண்ணீருக்கு உள்ளேயே போய் அணையை ஆராய்வது வரை எனக்கு எல்லாமே தெரியும்.

மறுபிறவி, மறுஜென்மம் பத்தி எனக்கு பெருசா தெரியாது. ஒருவேளை அது உண்மையா இருந்தா, அடுத்த பிறவில விவசாயி மகனா பிறக்கணும்னு ஆசப்படுறேன்.

டெல்லி, டெல்லி என பேசுகின்றனர், ED ரெய்டு வந்தால் வெள்ளைக் கொடி காட்டுகின்றனர். டெல்லி அணி, அந்த அணி, இந்த அணி என எல்லா அணியும் இந்த எலெக்சன்ல நொறுங்கும்.. தவெக அடிச்சி நொறுக்கும். கிரிக்கெட்டுல விசில் போடுறது நம்ம CSK.. வர போற தேர்தல்ல விசில் போட போறது நம்ம TVK.. ஜனநாயகன் விவகாரத்தில் குரல் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி

இது மற்றவர்களுக்குதான் ELECTION, எனக்கு இது EMOTION. என்னை தடுக்க திமுகவும், அதிமுகவும் மறைமுக டீலிங் போட்டு செயல்படுகின்றனர். ஒருபக்கம் என் பிரசாரத்தை முடக்க SOP போடுகின்றனர், மறுபக்கம் பழிமேல் பழி போடுகின்றனர். ஓம் சக்தி பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி.

ஒண்ணு நீ... இல்லன்னா நான்... நம்மை தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது... நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தோம். விஜய் வந்ததால் நமக்கு தொல்லை. மக்கள் வேறு அவனைத்தான் நம்புகிறார்கள். அதனால், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்துவிடு. நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்னை கொடுக்கிறார்கள்.

தமிழ்நாடு தண்ணீரில் திவாலாக போகுது... கனிம வளத்தில் திவாலாக போகுது... மணலில் திவாலாக போகுது... ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாடே திவாலாக போகுது.

விஜய், பாஜகவிற்காக பேசுவதாக நான் பேசியதை திரித்து பேசுகின்றனர். சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலை செய்வாங்களே.. அதை இனிமேல் செய்ய முடியாது என தெரிந்துகொண்டு நான் பேசுவதை திரித்து பேசி தில்லுமுல்லு வேலை செய்கின்றனர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே... என் நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே... சாரி, வேலூரில் இதை நான் சொல்ல மறந்துட்டேன். உங்களுக்காக இங்கே சொல்றேன். எனக்கும் என் மக்களுக்குமான உறவு இயற்கையான உறவு.. வேறு யாராலும் உள்ளே நுழையவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் தண்ணீர் திவால் தொடர்பாக நீர் வளம் குறித்து தினத்தந்தி செய்தியை சுட்டிக்காட்டி விஜய் பேசினார்.

முன்னதாக தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டிருந்ததாவது:-

கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை. நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.

ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.

தீர்வுகள் என்ன?

ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.

"விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.

"நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.

எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.