சென்னை,
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆனபோதிலும் இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காண இருக்கிறது. அதுவும், 'முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்துவிட வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறது.
விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கு அச்சாரம் போட்டது. மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், "சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்" என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில், இதுபோன்று யாரும் கூட்டணி கட்சிகளுக்கு அதிரடி ஆபர் வழங்கியதில்லை.
பா.ஜ.க.வின் வளர்ச்சி
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் ஒதுக்கீடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதற்கு காரணமாக, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் உயர்ந்தது. அதாவது, காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அதன் வாக்கு சதவீதம் 10.68 தான். அதே நேரத்தில், பா.ஜ.க. ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை என்றாலும் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 11.24 ஆகும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஏன்?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத பா.ஜ.க.வின் வளர்ச்சி, காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அதனால்தான் இந்த முறை தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு என கட்சியை வளர்ப்பதற்கான யோசனையும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போன் மூலமும், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
த.வெ.க. கூட்டணிக்கு வந்தால் எத்தனை இடங்கள்?
ஆனால், தற்போது வரை தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்வதாக காங்கிரஸ் கட்சி கூறிவந்தாலும், த.வெ.க. நிர்வாகிகளுடன் தொடர்ந்து திரை மறைவில் பேச்சு வார்த்தையை நடத்தி கொண்டுதான் இருப்பதாக சொல்லப்படுகிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவி என வாரி வழங்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டதாம். மேலும், 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறதாம்.
காங்கிரஸ் நிர்வாகிகள் விரக்தி
இப்படி, த.வெ.க.வின் அதிரடி ஆபர்களால் காங்கிரஸ் கட்சியும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறதாம். ஏற்கனவே, தி.மு.க.வுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்துவதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டும், இன்னும் பேச்சு வார்த்தைக்கு தி.மு.க. அழைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபாலின் தமிழக வருகையும் தள்ளிக் கொண்டே போகிறது. காங்கிரஸ் நிர்வாகிகளும் விரக்தியில் உள்ளனர்.
த.வெ.க.வுடன் கைகோர்க்க திட்டம்
எனவே, த.வெ.க.வின் ஆபர்களை ஏற்று கைகோர்க்கலாமா? என்று காங்கிரஸ் யோசித்து வருகிறது. அடுத்து டெல்லியில் இருந்து வரும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நேரடியாக த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.