சென்னை,
தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இன்னும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், "ஒருநாள் பொறுத்திருந்து பார்ப்போம். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்" என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவுக்கு விடுக்கப்பட்ட இந்த ஒருநாள் கெடு காலத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியை அழைக்காவிட்டால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டணியை விட்டு வெளியேறும் அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோம். இம்முறை திமுகவிடம் தவாக 2 தொகுதிகளை கேட்டது. ஒரு தொகுதி தருவதாக கூறினார்கள். கூடுதல் இடம் தருமாறு கேட்டோம். அத்துடன், தங்களது 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரினோம். சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடினேன்.
ஆனால், நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக எங்களை புறக்கணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை கேட்டு தவாகவை திமுக புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது.
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் சேர மாட்டோம். இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை. எங்களது 10 கோரிக்கைகளே முக்கியம். நான் வைத்துள்ள 10 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் பேசி வருகிறோம். ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.